வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதான நகரங்களை தூய்மையான அழகான நகரங்களாக மாற்றியமைக்கம் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த 2023.08.21 ஆம் திகதி காலை 07.00 மணியளவில் நல்லூர் பிரதேச சபையின் திருநெல்வேலி சந்திப்பகுதியில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையினது செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், திருநெல்வேலி நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் நகரின் தூய்மையைப் பேணுவதற்கான கழிவகற்றல் செயற்பாட்டினை மேம்படுத்துவதற்காக கழிவுப்பொருட்களை தரம்பிரித்து சேகரிப்பதற்கான பிளாஸ்ரிக் தொட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் பிளாஸரிக் போத்தல்களை சேகரிப்பதற்கான விசேட கூடைகளும் அறிமுகப்படுத்திவைக்கப்பட்டன. அத்துடன் சபையினது சிற்றூழியர்களிற்கு SAVE A LIFE நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கிவைக்கப்பட்ட விசேட சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடும் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அத்துடன் முச்சக்கர வண்டிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டுதல் செயற்பாடும் கௌரவ ஆளுநர் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் கழிவுப்பொருட்களைத் தரம்பிரித்தல் தொடர்பான வழிப்புணர்வு பதாதையும் திருநெல்வேலி சந்திப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது
மேலும் சபையினால் அண்மையில் உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்ட நிதிமூலம் கொள்வனவு செய்யப்பட்ட கழிவகற்றல் சேவைக்குரிய இரண்டு உழவு இயந்திரங்களும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள், திருநெல்வேலி நகர வர்த்தகர்கள் இச்செயற்றிட்த்திற்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டதுடன் இன்று ஆரம்பிக்கும் இச்செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அதன் நோக்கத்தினை அடைய சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்.