உள்ளூர் அதிகாரசபைக்கான அபிவிருத்தித்திட்டம்

2185/74ம் இலக்க 2023.07.24ம் திகதிய வர்த்தமானி பிரசுரிப்பின் மூலம் 1978ம் ஆண்டின் நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்ட இல 41ன் கீழ் நல்லூர் பிரதேச சபையானது நகர அபிவிருத்தி பகுதியாக வெளிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கான அபிவிருத்தித் திட்டம் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக சபையின் தலைமை காரியாலயம், கொக்குவில் உப அலுவலகம், நல்லூர் உப அலுவலகம் மற்றும் கொக்குவில் பொதுநூலகம் என்பவற்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், சபையின் இணையத்தளத்திலும் (www.nallur.ps.gov.lk) முகநூல் பக்கத்திலும் (https://www.facebook.com/NallurPradeshiyaSabhaa) மென்பிரதியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள மற்றும் சபை அபிவிருத்தியில் அக்கறையுள்ள தரப்பினர் மேற்படி திட்டத்தினை பார்வையிட்டு அது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களினை எதிர்வரும் 2025.01.21ம் திகதிக்கு முன்னராக எழுத்துமூலம் சபையின் தலைமை அலுவலகத்திலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ (npsnallur@gmail.com) அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இது சபை ஆளுகைப் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயம் என்பதனால் அதிக முன்னுரிமை வழங்கி தங்களால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் தெளிவான விபரங்களையும் தங்களுடைய தொடர்பு விபரங்களையும் இணைத்து அனுப்பி வைப்பது பயனுறுதியாக அமையும் எனக்கருதுகின்றேன்.

Online Payment

சபையின் ஆளுகைக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் ஆதனவரியை தங்கள் வீட்டிலிருந்தவாறே செலுத்துவதற்கேதுவாக தற்போது Online Payment சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் நேரவிரயத்தை குறைப்பதுடன் பிரயாணச்செலவுகளையும் மட்டுப்படுத்த இயலும். பொதுமக்கள் தங்களது கைத்தொலைபேசியிலோ அல்லது கணணியிலோ www.pay.cat2020.lk என்ற இணையத்தளத்திற்குள் செல்வதன் மூலம் அல்லது உள்ளூராட்சி மன்ற இணையத்தளத்தில் www.nallur.ps.gov.lk காட்சிப்படுத்தப்பட்ட Online payment என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமோ தங்களிற்கான ஆதனவரியை செலுத்த முடியும். இச்சேவையை தாங்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் வருமாறு:
1. தங்களது ஆதனம் பதியப்பட்டுள்ள உப அலுவலகங்களில் தங்களது தேசிய அடையாள அட்டை, தொலைபேசி இலக்கங்களை முதலில் பதிவு செய்துகொள்ளுங்கள். (Customer Registration)
2. https://pay.cat2020.lk/ என்ற இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுப்பனவிற்கான வலைப்பக்கம் திறக்கப்படும்.
3. வாடிக்கையாளர் பதிவில் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், மாகாணம், உள்ளுராட்சி நிறுவனம், கிராமசேவையாளர் பிரிவு, முகவரி, நகரம், மாவட்ட தபால் இலக்கம் என்பவற்றை முறையே பதியப்படவேண்டும். பதியப்பட்ட பின்னர் Sign Up என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
4. தங்களை online கொடுப்பனவிற்கு பதிவு செய்த பின்னர் Sign in மூலம் தங்களது தொலைபேசி இலக்கத்தையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ உள்ளீடு செய்யும்போது தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது மின்னஞ்சலிற்கு குறுஞ்செய்தி மூலம் இரகசிய இலக்கம் (OTP) பெறப்படும். குறித்த இலக்கத்தை பதிவிடுதல் மூலம் கொடுப்பனவு செய்வதற்கான முகப்பு தோன்றும்.
5. அதில் தங்கள் ஆதனம் தொடர்பான விபரம் காட்டப்பட்ட அட்டவணையில் இறுதியில் Pay என்ற பொத்தனை அழுத்தும்போது குறித்த கொடுப்பனவு தொடர்பான அனைத்துத் தகவல்களும் (செலுத்த வேண்டிய தொகை, செலுதப்படும் ஆதனத்தின் வகை, கழிவுகள் இருப்பின் அதன் விபரங்கள்) காட்சிப்படுத்தப்படும்.
6. செலுத்தும் தொகையை உள்ளீடு செய்து Pay Now என்ற பொத்ததனை அழுத்துவதன் மூலம் கொடுப்பனவு முறைக்கான முகப்பு தோன்றும்.
7. அதில் தங்களது வங்கி அட்டை தொடர்பான விபரங்களை உட்செலுத்த வேண்டும்.
8. விபரங்கள் சரியாக பதியப்பட்ட பின்னர் தங்களது கொடுப்பனவு தொகை காட்டப்படும் பொத்தானை அழுத்த வேண்டும்.
9. கொடுப்பனவினை உறுதி செய்வதற்கு தங்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாகக் கிடைக்கப்பெறும் OTP Codeஐ உட்செலுத்த வேண்டும்.
10. சரியான முறையில் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருப்பின் திரையில் Payment Success என்ற அறிவிப்பு கிடைக்கப்பெறுவதுடன், பணம் செலுத்திய பற்றுச்சீட்டு தங்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாகக்கிடைக்கப்பெறும்.
11. தங்களால் செலுத்தப்பட்ட கட்டண விபரங்களை Dashboardஇல் காணப்படும் Historyஇனுள் பார்வையிட முடியும்.

வறுமைக்கோட்பட்ட 60 கர்ப்பிணித் தாய்மார்களிற்கு தாய் சேய் நல பிரசவப்பொருட்கள் வழங்கல்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான “அனைத்து வயதிலும் நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்தல்” என்ற இலக்கை அடையும் நோக்கில் சபை ஆளுகையினுள் வதியும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலரின் சிபார்சிற்கமைய வறுமைக்கோட்பட்ட 60 கர்ப்பிணித் தாய்மார்களிற்கு ரூபா 621,626.40 பெறுமதியான தாய் சேய் நல பிரசவப்பொருட்கள் அடங்கிய பொதிகள் சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டன. குறித்த பொதிகளை கர்ப்பிணித்தாய்மார்கள் சிரமமின்றி இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை உத்தியோகத்தர்களினால் கர்ப்பிணித் தாய்மார்களிற்கு வழங்கிவைக்கப்பட்டது.

பாராளுமன்றத் தேர்தல் 2024

எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில் யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட விழிப்புணர்வூட்டும் காணொளி இதுவாகும். பொதுமக்களின் உரிமையும் கடமையுமான வாக்களித்தலை சரியான முறையில் மேற்கொள்வதற்கு இக்காணொளி உறுதுணையாக அமையும்.

காணொளியை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்  - https://www.facebook.com/61556532111908/videos/1309923283370589

தேசிய வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு

”உலகை வென்றவா்கள் வாசித்த மக்களே“ எனும் தொனிப்பொருளிற்கு அமைய நல்லூா் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கொக்குவில், கோண்டாவில், நல்லூா் நூலகங்களின் 2024ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு 20.10.2024 அன்று இனிதே இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணா் மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி சி.சிவதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபா் திரு.பெ.வசந்தன் ஆகியோரிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள். மற்றும் பரிசில்களைப் பெற்ற மாணவா்களிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, வரவேற்பு நடனத்தை வழங்கிய யா.கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய மாணவிகளிற்கும் பட்டிமன்றத்தை வழங்கிய திரு.எஸ்பீரியா் ஜனாா்த் குழுவினரிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கொக்குவில் பொது நூலகத்தின் வாசிப்பு முகாமின் 6ம் வார நிகழ்வு

ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் யா/ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் 04.10.2024 அன்று பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்ற வாசிப்பு முகாமின் 6ம் வார நிகழ்வின் பதிவுகள்.

தேசிய வாசிப்பு மாதம் – 2024 ஆக்கத்திறன் போட்டியின் 2ம் நாள்

வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டியின் 2ம் நாள் போட்டிகளுக்காக தமது பெற்றோருடன் ஏராளமான மாணவா்கள் வருகை தந்தனர். 29.09.2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொது அறிவுப் போட்டி ,வா்ணம் தீட்டுதல்,கிரகித்தல், Puzzles பொருத்துதல்,விரைவு கணிதம் மற்றும் கட்டுரை கவிதைப் போட்டிகள் நடைபெற்றன.

தேசிய வாசிப்பு மாதம் – 2024 ஆக்கத்திறன் போட்டியின் 1ம் நாள்

28.09.2024ம் திகதி ஆரம்பித்த கொக்குவில் பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதம் - 2024 ஆக்கத்திறன் போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களையும் ஆர்வத்துடன் அவர்களை அழைத்துவந்த பெற்றோர்களையும் படத்தில் காணலாம். அன்று மாலை சொல்லுருவாக்க போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.

சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளிற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான ”அனைவரும் உள்ளடங்கிய சமத்துவமான கல்வியையும் வாழ்நாளுக்கான கற்றல் சந்தர்ப்பத்தினையும் உறுதி செய்தல்” என்பதனை அடிப்படையாகக் கொண்டு உலக வங்கியின் நிதியீட்டத்தில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் (LDSP) Basic Tranche 04இல் LAPDPஇல் தெரிவு செய்யப்பட்ட உப கருத்திட்டத்தில் சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் முன்பள்ளி சிறார்களிற்கு பயனூட்டும் வகையில் 18 முன்பள்ளிகளுக்கு ரூபா 1,575,180.00 பெறுமதியான விளையாட்டுப்போட்டிகளிற்கான Band Sets வழங்கப்பட்டன.

கொக்குவில் பொது நூலகத்தின் வாசிப்பு முகாமின் 5ம் வார நிகழ்வு

ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் யா/ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் 27.09.2024 அன்று பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்ற வாசிப்பு முகாமின் 5ம் வார நிகழ்வின் பதிவுகள்.