Category: நிழற்படங்கள்
வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவித்தலும் நூலகங்களின் நூலக அங்கத்தவர்களை அதிகரித்தலும்
“நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு”
என்ற ஔவையாரின் வரிகள் இந்த உலகில் ஒரு மனிதன் எந்த அளவுக்கு நூல்களை வாசிக்கிறானோ,
அந்த அளவுக்கு அவன் அறிவினை பெற்றுக்கொள்கிறான் என கூறுகின்றது. வாசிப்பு ஒரு
மனிதனை பூரணப்படுத்துவதோடு, சிறந்த அறிவுத்திறனையும், நுண்ணறிவினையும் வழங்குகிறது.
ஒரு நல்ல நூல் ஒரு நல்ல நண்பனுக்கு ஒப்பானது. எனவே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்குடனும் சபையினால் நூலக அங்கத்தவர்களை அதிகரிக்கும் நோக்கிலும் மக்களிற்கான நூலக அங்கத்துவம் தொடர்பில் பின்வரும் விதிமுறைகள் இலகுபடுத்தப்பபடுகின்றது.
- நூலக அங்கத்துவப் படிவத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். (https://www.nallur.ps.gov.lk/wp-content/uploads/2024/04/101.pdf எனும் லிங்கை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்)
- நூலக அங்கத்துவக் கட்டணமின்றி அங்கத்துவம் பெற்றுக்கொள்ளலாம்
- பாடசாலை மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபரின் கையொப்பத்துடன் விண்ணப்பங்களை வழங்கி நூலகத்தில் அங்கத்துவம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கமைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கேதுவாக தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது குடும்ப பதிவு அட்டையின் பிரதியை உறுதிப்படுத்தி நூலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- பாடசாலை மாணவர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது குடும்ப பதிவு அட்டையின் பிரதியை உறுதிப்படுத்தி நுலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
இதற்கமைய வாசிப்பு எப்போதும் மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியது என்பதனை உணர்ந்து, அனைவரையும் நூலகத்தில் இணைத்து
வாசிப்பை ஊக்குவிக்க
முயலுவோம்.
UNDPஇன் Resident Representative Azusa Kubotaஇன் விஜயம்
UNDPஇன் Resident Representative Azusa Kubota கடந்த 14ம் திகதி சபைக்கு விஜயம் செய்து சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட UNDP திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன் பின்னர் சபையின் வினைத்திறனான நவீன தொழிநுட்பத்துடனான சேவை வழங்கல் தொடர்பில் தனது ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளமை பெருமைக்குரியது.
இலத்திரனியல் முறையிலான வருமான அறவீடு
எமது சபையினால் நாளாந்தம் வருமான அறவீடுகள் மேற்கொள்ளப்படும் போது விரைவாகவும் பொதுமக்கள் இலகுவான முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளத்தக்கவாறு மாற்றியமைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக வங்கி அட்டைக்கான பணப்பரிமாற்றம் மற்றும் QR முறை மூலமான பண பரிமாற்றம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தமது கொடுப்பனவுகளை இலகுவான முறையில் மேற்கொள்ள முடிவதுடன், சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற நடமாடும் சேவை வழங்கலின் போதும் பொதுமக்களுக்கான சேவை வழங்கலை இலகுபடுத்த முடிகின்றது.
கொக்குவில் உப அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைக்கப்பட்டமை.
நீண்டகாலமாக போதிய பௌதீக வசதிகளற்ற நிலையில் கொக்குவில் உப அலுவலகம் இயங்கிவந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி பொருத்தமான வளங்களுடன் கொக்குவில் பகுதிக்கு மையமான குளப்பிட்டி சந்தியில் சபைக்கு சொந்தமான ஆதனத்தில் புதிய இரு தளங்களுடனான உப அலுவலகம் இவ்வாண்டில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கான சேவை வழங்கல் மிகவும் வினைத்திறனான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சபையின் எல்லைக்குள் வதியும் மற்றும் சபைக்கு சேவை பெறவரும் மாற்றுத்திறனுடைய குடிமக்கள் தமக்கான சேவை நிலையங்களிற்கு சமூகமளிக்கும் சந்தர்ப்பங்களில் எதுவித இடர்பாடுகளையும் எதிர்நோக்காது தமது சேவையினை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான முறையில் இவ்வலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமை முன்னேற்றகரமானதோர் செயற்பாடாக அமைந்துள்ளது. இதன்மூலம் இவர்களுக்கு உளரீதியான தாக்கமின்றி சமூகத்தில் அவர்களும் சமாந்தரமான முறையில் சேவை பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மின்விளக்கு பொருத்துதல்
சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாண்டில் மேலதிகமாக 141 மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு வீதிகளில் இரவுநேரங்களில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடக்கூடியசூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மின்குமிழ்களினை மின்கம்பங்களில் பொருத்துவதற்கான செலவாக ஒவ்வொரு மின்குமிழுக்கும் தலா 4இ422 ரூபாய் வீதம் சபையினால் இலங்கை மின்சாரசபைக்கு செலுத்தப்படுகின்றது. இதற்கென பாரியளவிலான சபைநிதி செலவிடப்படுகின்ற போதிலும், பொதுமக்களின் தேவையின் அவசியத்தினை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்து.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டி
நல்லூர் பிரதேசசபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையிலான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டி 2023.10.28 சனி மற்றும் 2023.10.29 ஞாயிறு ஆகிய தினங்களில் திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. 15 சனசமூக நிலையங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டிகளில் கொக்குவில் நேதாஜி ச.ச.நிலையம் சாம்பியனாகியது. இரண்டாம் இடத்தினை கொக்குவில் வராகி ச.ச நிலையம் பெற்றுக்கொண்டது. போட்டியின் போதான சில பதிவுகள்..